சக்கரை நோய்க்கு இரத்தப் பரிசோதனை செய்வது எப்படி?

உங்களுக்கு சக்கரை நோய் இருப்பதைக் கண்டறிந்தால், உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவைப் பின்பற்றத் தொடங்குவீர்கள். அப்படி நீங்கள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றும்போது, உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீரான இடைவெளியில் பார்க்க விரும்புவீர்கள். எனவே,சுய இரத்தப் பரிசோதனை மூலம் உங்கள் சர்க்கரை அளவை எப்படி பார்ப்பது பற்றி இந்த வலைப்பதிவில் பார்க்கலாம்.

சுய இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதற்கு ஏற்ற நேரம் :

இன்சுலின் உபயோகிப்பவர்களுக்கு குறிப்பாக வகை-1- Type 1 (IDMM) மற்றும் கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes mellitus) உள்ளவர்களுக்கு பொதுவாக தினமும் காலி வயிற்றில் (Fasting state), உணவுக்கு முன் (Before meals), உணவுக்கு பின் 2 மணி நேரம் கழிந்து (Post prandial blood glucose) மற்றும் படுப்பதற்கு முன் (Before bed) என 4 முறை சுய இரத்தப் பரிசோதனையை குளுக்கோமீட்டர் உபயோகித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு தொடர் இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவின் மாறுதலுக்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சையில் மாற்றம் செய்வர்.

இரண்டாம் வகை ( Type 2/NIDDM) சர்க்கரை நோயாளிகளில் இன்சுலின் பயன்படுத்துபவர்கள் வாரத்தில் 4 முறை [2 முறை வெறும் வயிற்றுடன் (2 Fasting) 2 முறை உணவிற்கு பின் 2 மணி நேரம் கழிந்து (2 PP sugar)] சுய இரத்தப் பரிசோதனைகள் செய்தல் அவசியம்.

கூடுதலாக படுக்கைக்கு செல்வதற்கு முன்பும் (Before bed), உணவிற்கு முன்பும் (Before Meals) சுய இரத்தப் பரிசோதனைகள் செய்து சர்க்கரை அளவுகளைக் குறித்து வைப்பதால், அதற்கேற்ப மருத்துவர் உங்கள் மருந்து, மாத்திரை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க இயலும்.

இரத்தப் பரிசோதனை செய்யும் முறை (குளுக்கோமீட்டர் உபயோகிக்கும் முறை)
  • குளுக்கோமீட்டர் எனும் இரத்தப் பரிசோதனைக் கருவியை இயங்கச் செய்து (Switch on), அதில் மருந்து அட்டையை (Reagent strip) அதற்குரிய இடத்தில் நுழைத்து வைக்க வேண்டும்.
  • கையில் ஒரு விரல் நுனியை ஸ்பிரிட் பஞ்சு மூலம் சுத்தப்படுத்தி அந்த இடத்தை ஊசியால் (Lancet) குத்தி இரத்தம் வரச் செய்ய வேண்டும்.
  • ஒரு துளி இரத்தத்தை, மருந்து அட்டையில் அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டும்.
  • ஒரு சில மணித்துளிகளில் குளுக்கோமீட்டரில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை யின் அளவு (Blood glucose reading) தெரியவரும்

இவ்வாறு கண்டறியப்பட்ட இரத்த சர்க்கரை அளவை குறித்து வைத்து மருத்துவரிடம் காட்டி அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.

சரியான குளுக்கோமீட்டரைத் தேர்ந்தெடுத்தல்

 தற்பொழுது 20 வகைகளுக்கும் மேற்பட்ட குளுக்கோமீட்டர்கள் சுய இரத்தப் பரிசோதனை கருவி, விற்பனைக்கு வந்துள்ளன. எனவே, குளுக்கோமீட்டரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது கீழ்க்கண்டவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்:

  • அளவு (Size)
  • எடை (Weight)
  • பரிசோதனைக்கான நேரம் (Test time)
  • பதிவில் வைக்கும் திறன் (Memory capacity)
  • பேட்டரி  திறன் (Battery life)
  • பரிசோதனைக்கு தேவைப்படும் இரத்த அளவு (Blood sample size)
  • செலவு (Cost)
  • ஊசி (Lancet)
  • சரிபார்க்கும் திரவம் (Control solution)
  • மீட்டர்பெட்டி (Meter box)

சரியான குளுக்கோமீட்டர் சம்பந்தமான அனைத்து விளக்கங்களையும் உங்கள் மருத்துவரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

இறுதிச் சுருக்கம்:

ஆகையால், சுய இரத்தப் பரிசோதனைகள் மூலம் உங்கள் சர்க்கரை அளவை பார்த்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து இருப்போம். இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் கிளினிக்கைத் தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் உங்களுக்கு சிறந்த உதவி மற்றும் ஆதரவை வழங்குவோம்.