இன்சுலின் ஊசி போடும் முறை

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, சர்க்கரை நோய் சிக்கல்கள் வராமல் தடுக்க உங்கள் மருத்துவர் இன்சுலின் பரிந்துரைப்பார். இன்சுலின் என்று வரும்போது அதை எப்படி பயன்படுத்துவது என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கும். இந்த வலைப்பதிவு இன்சுலின் ஊசி போடும் முறை  பற்றி கையாள்வதால் உங்களில் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்

 இன்சுலின் பயன்படுத்துபவரா நீங்கள்?

இன்சுலின் யாருக்கு, எவ்வளவு நாட்கள் தேவையென மருத்துவர் சில பரிசோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் அறிவுறுத்துவார். பலருக்கு சில மாதங்கள் மட்டும் இன்சுலின் ஊசி போட்டு, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருதல் (குறிப்பாக HbA1c 7 விழுக்காட்டிற்கு வரும் வரை) அவசியம்.

இதனால் கணையத்திற்கு (Pancreas) ஓய்வு கிடைப்பதால், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது. இதுபோல், சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு 3-4 வருடங்களுக்கு ஒரு முறை, சில நாட்கள் இன்சுலின் ஊசி (Insulin injection) பயன்படுத்தப்படுகிறது.

உணவுக்கு சுமார் 1/2 மணி நேரம் உள்ள போது இன்சுலின் போடவும்

இன்சுலின் ஊசி போட தேவையானவை (Insulin kit)

1. இன்சுலின் மருந்து (Insulin bottle/Pen)

2. மருந்து அளவிற்கேற்ற ஊசி (Correct Syringe – 40 units & 100 units)

3. ஸ்பிரிட் பாட்டில் (Spirit bottle)

4. பஞ்சு (Cotton)

5. இன்சுலின் அளவுக் குறிப்பு (Insulin dose hint)

இன்சுலின் ஊசி போடும் முறை
  • இன்சுலின் ஊசி போடுவதற்கு முன்பு தேவையான அனைத்தையும் இன்சுலின்  பெட்டி (Insulin kit) அருகில் வைத்துக் கொள்ளவும்.
  • மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துதானா என சரிபார்த்துக் கொள்ளவும்.
  • மருந்து பாட்டிலில் உள்ள அளவிற்கு ஏற்ற சரியான ஊசியா (Syringe என சரிபார்க்கவும். அதாவது, 40 யூனிட் மருந்திற்கு 40 யூனிட் ஊசியும் 100 யூனிட் மருந்திற்கு 100 யூனிட் ஊசியும் பயன்படுத்தவும்.
  • இன்சுலின் எடுக்கும் முன் கைகளை நன்கு சுத்தம் செய்யவும்.
  • இன்சுலின் பாட்டிலை இரு கைகளுக்கு இடையில் வைத்து பலமுறை உருட்டி, மருந்தை நன்கு கலக்கவும்.
  • பாதுகாப்பு மூடியை நீக்கவும்.
  • ஸ்பிரிட் நனைத்த பஞ்சினால் (Spirit cotton) பாட்டில் மேல் பகுதியை சுத்தம் செய்யவும்.
  • ஊசியில் போட வேண்டிய இன்சுலின் அளவிற்குச் சமமான காற்றை இழுக்கவும்.
  • காற்றினை மருந்து (இன்சுலின்) பாட்டிலுக்குள் செலுத்தவும்.
  • பாட்டிலை கண் மட்டத்திற்கு கவிழ்த்துப் பிடித்து தேவையான இன்சுலினை (மருத்துவர் பரிந்துரைத்த அளவு) ஊசியில் எடுக்கவும்.
  • ஊசியில் (Syringe) காற்றுக்குமிழிகள் (Air bubbles) இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
  • ஊசி போட வேண்டிய இடத்தை ஸ்பிரிட்டில் நனைத்த பஞ்சால் (Spirit cotton) சுத்தம் செய்யவும்.
  • ஸ்பிரிட் உலர்ந்ததும், அந்தப் பகுதியை (தசையை) சற்று உயர்த்தி பிடித்து ஊசியை நேராகச் செலுத்தவும்.
  • இன்சுலின் தோலுக்கடியில் உள்ள தசையில் சென்றடையுமாறு ஊசியைச் செலுத்தி, மெதுவாக மருந்தைச் செலுத்தவும்.
  • ஊசியை நேராக வெளியே எடுத்து, அந்த இடத்தில் பஞ்சு (Cotton) கொண்டு அழுத்தவும்.
  • பயன்படுத்திய ஊசியை (Used syringe) குப்பையில் போடவும்.

இதில் மேற்கொண்டு சந்தேகம் இருப்பின் மருத்துவர், செவிலியர் (Nurse) மற்றும் உணவியல் நிபுணர் (Dietician) ஆகியோரிடம் விளக்கங்களைக் கேட்டுப் பெறலாம்.

குறிப்பு : தற்பொழுது உள்ள இன்சுலின் ஊசிகள் (Insulin syringes) அனைத்தும் ஒரு முறை மட்டுமே (Use and throw) பயன்படுத்தக் கூடியவை. எனவே, ஒரு முறை உபயோகித்த ஊசியை, மறுமுறையும் உபயோகிக்காமல் குப்பையில் போட வேண்டும்.

மொத்தத்தில்

எனவே, இன்சுலின் ஊசி போடும் முறையை நன்கு அறிந்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துகொள்வோம். மேலும், சர்க்கரை நோயை நிர்வகிப்பது குறித்து உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.